இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அபாயகரமாக உயர்ந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார் 250,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று (12) ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் சம்பா பெர்னாண்டோ , இந்த நிலைமை மிகவும் தீவிரமடைந்து வருவதாகவும், “நாம் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு எரிமலை மீது அமர்ந்திருக்கிறோம்” என்றும் எச்சரித்தார்.
பெண் நாய்கள் ஆண்டுக்கு இருமுறை குட்டி ஈனுவதால், தற்போது இலங்கையில் ஒவ்வொரு எட்டு மனிதர்களுக்கும் ஒரு தெரு நாய் என்ற விகிதத்தில் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு நாய்கள் நலனுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டதை வரவேற்ற அவர், கடந்த ஆண்டு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 184 மில்லியனில் ரூ. 27 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும், நிதி முறையாகப் பயன்படுத்தப்படாததால் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.