” உற்பத்தி என்பது வலுவான பொருளாதாரங்களின் முதுகெலும்பாகும். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது,” என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் ஜெர்மனி சென்றுள்ளார். பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவு பெறாத நிலையில் அவரது பயணம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பிஎம்டபிள்யூ ஆலையை ராகுல் பார்வையிட்டார். அங்கிருந்த BMW G450GS மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தார். இந்த வாகனம் தமிழகத்தின் ஓசூரில் செயல்படும் டிவிஎஸ் நிறுவனத்துடன் BMW நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்டது ஆகும். இது இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.
இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கத்தில் ராகுல் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள BMW ஆலையை பார்வையிட்டேன். இதன் மூலம் BMW உலகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உலகத் தரம் வாய்ந்த உற்பத்தியை மிக அருகில் இருந்து பார்ப்பது ஒரு அற்புதமானது.
BMW உடன் இணைந்து உருவாக்கப்பட்ட TVS நிறுவனத்தின் 450 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை காண்பது சிறப்பு. இந்திய பொறியியலை காட்சிபடுத்துவதை காண பெருமையான தருணம்.
உற்பத்தி என்பது வலுவான பொருளாதாரங்களின் முதுகெலும்பாகும். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது. வளர்ச்சியை விரைவுபடுத்த நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். அர்த்தமுள்ள உற்பத்தி அமைப்புகளை உருவாக்க வேண்டும். உயர்தர வேலைகளை அதிகளவில் உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.