‘2021 தேர்தல் வாக்குறுதிப்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது’ என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரையில் சங்க மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 2500 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். 2021 தேர்தல் அறிக்கையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கு மேல் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியது.
ஆனால் தற்போது டிச., 9 ல் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்க மாநில தலைவர் ஜெயந்திக்கு திட்ட இயக்குனர் சீதாலட்சுமி அனுப்பிய கடிதத்தில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை பரிசீலித்தோம்.
அதன்படி மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் நுாறு சதவீதம் மத்திய அரசு நிதிஉதவியுடன் செயல்பட்டு வருவதால், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்கோ, முறைப்படுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை.
அரசு ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய வேறு எந்த பயன்களும், சலுகைகளும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படாது எனத்தெரிவித்துள்ளனர். மணிப்பூர், ராஜஸ்தான், ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்துள்ளனர்.
ஆளும் தி.மு.க, அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என மாநில திட்ட இயக்குநர் அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவது உட்பட அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., அளித்த அனைத்து வாக்குறுதிகளும் இதே நிலைதானா என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றினால் 2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.