மருதமுனை கடற்கரை திறந்தவெளித் திடலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இலங்கைத் திருநாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெருநாள் தொழுகைகள் இன்று (21) சிறப்பான முறையில் நடைபெற்றன.
இந்நிலையில் அம்பாறை மாவட்டம், மருதமுனை கடற்கரை திறந்தவெளித் திடலில் பெருநாள் தொழுகையும் பிரசங்கமும் இன்று காலை நடைபெற்றன. மருதமுனை தாருல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம். முபாறக் மதனி தொழுகையை வழிநடத்தியதுடன் விசேட பிரசங்கத்தையும் நிகழ்த்தினார். கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வுகள் மிகவும் அமைதியான முறையிலும் உற்சாகமாகவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றிய இஸ்லாமியர்கள், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவு வகைகளைப் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.