சென்னை
தமிழ்நாடு அரசின் மாபெரும் முன்னெடுப்பான ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு மோதிரங்களை விநியோகம் செய்ய ‘ஜாய் ஆலுக்காஸ்’ மற்றும் ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திட்டத்தின் நோக்கம் மற்றும் துவக்கம்:
-
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும், தாயையும் கௌரவிக்கும் விதமாக இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.
-
தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலும், அரசு மருத்துவச் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் பிரம்மாண்டமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. கடந்த ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும்.
1 பைசா டெண்டர் மற்றும் நிறுவனங்கள் தேர்வு:
-
இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் ஒப்பந்தப்புள்ளிகள் (Tender) கோரப்பட்டன. இதில் மொத்தம் 11 நிறுவனங்கள் பங்கேற்றன.
-
இந்த டெண்டரில், 1 கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து மற்றும் BIS ஹால்மார்க் முத்திரை என அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து வெறும் 1 பைசா (ரூ. 0.01) மட்டுமே சேவைக் கட்டணமாக அளித்து ‘ஜாய் ஆலுக்காஸ்’ நிறுவனம் மிகவும் குறைந்த விலைப்புள்ளியைக் கோரியது.
-
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளி சட்டத்தின்படி, இந்த 1 பைசா குறைந்த விலைப்புள்ளியை மற்ற 10 நிறுவனங்களிடம் ஒப்பிட்டு இசைவு கேட்டபோது, ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நிறுவனம் மட்டுமே அதே விலைக்கு மோதிரங்களை வழங்கச் சம்மதம் தெரிவித்துள்ளது.
70:30 விகிதத்தில் பணி ஆணை:
திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், ஜூன் மாதத்திலிருந்து முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை வழங்குவதற்காக, குறைந்த விலைப்புள்ளி அளித்த ‘ஜாய் ஆலுக்காஸ்’ நிறுவனத்திற்கும், அதற்கு இசைவளித்த ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நிறுவனத்திற்கும் முறையே 70:30 என்ற சதவீத அடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்போது அதிகாரப்பூர்வமாகப் பணி ஆணை வழங்கியுள்ளது.
#ThaiMamanThangaMothiram #ChiefMinisterVijay #TVKGovernment #Joyalukkas #KalyanJewellers #GoldRingScheme #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates