வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் திரு. லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். அன்னாரது இந்த கொலை தொடர்பில் பாக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். கொலை கலாச்சாரம் சமூகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் வாக்குகளால். தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாச்சாரத்தின் மற்றொரு அங்கமாகும். இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை, காட்டுச் சட்டம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக, குடிமக்களின் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ளது. இந்த கொலை கலாச்சாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது விழுந்த அடியாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.