விருது பெற்ற தமிழ்க்கனேடிய நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணனுக்கு எதிராக இணையத்தில் திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்களை கனேடிய தமிழர் பேரவை (CTC) வன்மையாகக் கண்டித்துள்ளது.
தங்களது முகநூல் பதிவில், ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் அடையாளத்தை தாங்களே தேர்ந்தெடுத்து வெளிப்படுத்தும் அடிப்படை உரிமை இருப்பதாக CTC வலியுறுத்தியுள்ளது.
மைத்ரேயி இராமகிருஷ்ணனை குறிவைத்து நடைபெறும் ஒருங்கிணைந்த இணையத் தாக்குதல்கள் வெறும் கருத்து வேறுபாடு அல்ல; அவருடைய தனிப்பட்ட அடையாளத்தையும் தன்னுரிமையையும் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் இளையோர் தங்களின் அடையாளத்தை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை வெளிப்புற குழுக்களோ அல்லது தனிநபர்களோ தீர்மானிக்க முடியாது என்றும் CTC தெரிவித்துள்ளது.
மேலும், இணையவழித் துன்புறுத்தல்களை நிராகரித்து, தனிநபரின் தன்னுரிமையை மதிக்கும் உள்வாங்கும் சமூகச் சூழலை உருவாக்க அனைவருக்கும் கனேடிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது