முறையான திட்டமிடல் இன்றிய வீதிச்சீரமைப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்துநெருக்கடியால், வயல்காவலுக்குச் செல்லுதல் மற்றும் வயல்நிலங்களுக்கு விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு விவசாயிகள், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் முறைப்பாட்டையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று புதன்கிழமை (03) குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு நீர்ப்பாசனக்குளத்தின் கீழான சுமார் 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களுக்குச் செல்லும் பாதைகளில் முறையான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட வீதிச் சீரமைப்பு பணிகள் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன.
குறிப்பாக தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி அபிவித்தித் திணைக்களத்திற்குரிய வீதியில் முறையான திட்டமிடலின்றிய வகையிலும், பொருத்தமற்ற காலப்பகுதியிலும் பல பாலங்களை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பாலங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.
அதேபோல் தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்குச்செல்லும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய வீதியிலும் முறையான திட்டமிடலின்றி, பொருத்தமற்ற காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாலம் அமைக்கும் வேலைத்திட்டமும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது. இவ்வாறாக அவ்வீதியில் பொருத்தமற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ள நீரிலிருந்து பாதுகாப்பதற்காக வீதி வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களால் இதன்போது முறையிடப்பட்டது.
இத்தகைய சூழலில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அவ்வீதிகள் பாரிய அளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றன.
இதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். குறிப்பாக வயல் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதுடன், வயலுக்கான உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும் விவசாயிகள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரடியாக அவதானித்ததுடன், இதுதொடர்பில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து நிலமைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியதுடன், விவசாயிகளின் போக்குவரத்து இடர்பாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு வயல்நிலங்களுக்குச் செல்லும் வீதிப்போக்குவரத்தை தற்காலிகமாக சீர்செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.