வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்புப் பிரிவினரால் மேடையிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் பரபரப்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நேரில் கண்ட சாட்சியம்:
செய்தியாளர் போ எரிக்சன் (Bo Erickson) இந்த இக்கட்டான தருணத்தைப் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளார். அதில், துப்பாக்கிச் சத்தம் கேட்ட அடுத்த சில விநாடிகளில், இரகசியப் பொலிஸ் (Secret Service) அதிகாரிகள் அதிபரைச் சூழ்ந்துகொண்டு, அவரை மேடையிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மிக வேகமாக அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ட்ரம்ப்பின் கருத்து:
இந்தச் சம்பவம் குறித்து தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “வாஷிங்டனில் இது ஒரு பரபரப்பான மாலைப்பொழுது. ரகசியப் பொலிஸாரும் சட்ட அமலாக்கத் துறையினரும் மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளனர். அவர்கள் மிகவும் வேகமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டனர்,” என்று பாராட்டியுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் காயம்:
இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரகசியப் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக சிபிஎஸ் (CBS) செய்திகள் தெரிவிக்கின்றன. ஐந்து முதல் எட்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்த அதிகாரி குண்டு துளைக்காத அங்கி அணிந்திருந்ததால் உயிர் தப்பியுள்ளார். காயமடைந்த துப்பாக்கிதாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.