தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான மொத்த நோயாளர் தொகையும் 81,511 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை ஜூலை மாதமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இம் மாதத்தில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் இரண்டிலும் மட்டும் ஒட்டுமொத்தமாக 47,670 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மாகாண வாரியாகப் பார்க்கும்போது, மேற்கு மாகாணமே டெங்கு தாக்கத்தினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகத் தொடர்கிறது.
இங்கு மாத்திரம் 43,132 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாவட்ட வாரியாக நோக்கும்போது, கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 17,280 தொற்றுகளும், அதற்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16,213 தொற்றுகளும் பதிவாகியுள்ளன.