இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிரான்ஸுடன் நடத்துவதில் பயனில்லை என்றும், அது குறித்து பிரஸ்ஸல்ஸ் நகருடனேயே பேச வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் ஜி.எஸ்.பி. பிரச்சினை குறித்து பிரான்ஸுடன் பேசி பயனில்லை. அது குறித்து பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலேயே பேச வேண்டும். அதேபோன்று இங்கிலாந்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் முறைமையின்படியே இங்கிலாந்தும் ஜி.எஸ்.பி. சலுகையை வழங்குகிறது. எனவே, பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்லாமல் பிரான்ஸுக்குச் செல்வதால் எந்தப் பலனும் கிடைக்காது. ஏனெனில் இது பிரஸ்ஸல்ஸ் சார்ந்த ஒரு விடயமாகும் என தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனினும், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளை இலங்கை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. முன்னதாக 2010 ஆம் ஆண்டில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டு, பின்னர் 2017 இல் மீண்டும் வழங்கப்பட்டது.