சென்னை
கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர், தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே அந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் எனத் தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சொந்த விருப்பு வெறுப்பில் வட்டாட்சியர்:
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “குஜிலியம்பாறை வட்டாட்சியர் இன்னும் 6 மாதங்களில் ஓய்வுபெற உள்ளார். அவர் மாவட்ட ஆட்சியருக்குக் கூடத் தெரியாமலேயே, தனது சொந்த விருப்பு வெறுப்பின் கீழ் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இது குறித்து நான் சிபிஎம் தலைவர்களிடமும் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன்,” என்று தெரிவித்தார்.
பணியிட மாற்றம் & அதிரடி நடவடிக்கை:
“இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்த உடனேயே, அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறைரீதியான தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அரசு தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை,” என்று அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.
சர்ச்சையின் பின்னணி:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சி நிர்வாகிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என கிராம உதவியாளர்களுக்கு வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதேபோல, இடதுசாரி அமைப்புகள் மற்றும் கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என உயர்கல்வித்துறையும் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
தலைமைச் செயலாளருக்கு எதிராகப் போராட்டம்:
கடும் அரசியல் அதிர்வலைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் பின் இந்த இரு சுற்றறிக்கைகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், இந்த ஜனநாயக விரோத உத்தரவுகளுக்குத் தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார்தான் காரணம் என்றும், அவர் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் அரசியல் சூழலில் அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
#CTRNirmalKumar #TNMinister #GujiliyamparaiTahsildar #CPIM #CPI #TamilNaduGovernment #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates