பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கிரிப்டோகரன்சி (cryptocurrency) முதலீடுகளை ஊக்குவிப்பது போல் போலியாக உருவாக்கப்பட்ட ஏஐ (AI-generated) வீடியோக்களை நம்பி ஏமாந்ததால், தான் 83,000 டாலர்களை இழந்துள்ளதாக ஒன்டாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆக்டன் (Acton) பகுதியைச் சேர்ந்த டெபோரா ஃபிரீசென் (Deborah Friesen) என்பவர், சமூக ஊடக விளம்பரம் ஒன்றில் பிரதமர் மார்க் கார்னியின் டீப்ஃபேக் (deepfake) வீடியோவை முதன்முதலில் பார்த்துள்ளார். அதில், கனேடியர்கள் ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் கூறப்பட்டிருந்தன.
இதனை நம்பி அவர் ஆரம்பத்தில் 13,000 டாலர்களை இழந்தார். பின்னர், மற்றொரு நபர் இவரைத் தொடர்புகொண்டு பல மாதங்களாக தினமும் பேசி, அவரது நம்பிக்கையைப் பெற்று மீண்டும் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இதன் விளைவாக ஃபிரீசென் மேலும் 70,000 டாலர்களை இழந்துள்ளார்.
பொதுமக்களை ஏமாற்றி போலி முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, குற்றவாளிகள் பெருகிவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப்ஃபேக் வீடியோக்கள், குரல் குளோனிங் (voice cloning) மற்றும் போலியான கட்டுரைகள் மூலம் பொதுப் பிரமுகர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதாக கூட்டாட்சி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக விளம்பரங்களை மட்டுமே நம்பி ஒருபோதும் முதலீடு செய்ய வேண்டாம் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் கனேடியர்களை எச்சரிக்கின்றனர். அத்துடன், பெருமளவிலான பணத்தை மாற்றுவதற்கு முன்னதாக தங்களுக்கு நம்பிக்கையான குடும்ப உறுப்பினர்கள் அல்லது நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்குமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தாங்கள் இவ்வாறு குறிவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாக யாராவது கருதினால், உடனடியாக தங்களது வங்கி, உள்ளூர் பொலிஸ் மற்றும் கனேடிய மோசடி தடுப்பு மையத்தை (Canadian Anti-Fraud Centre) தொடர்பு கொள்ள வேண்டும்.