செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சுமார் ஒரு அடி ஆழமான குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்துக்குள் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனைக் குழிகளுக்குள்ளிருந்து தலையில்லா முண்டமான ஒரு எலும்புக் கூட்டுத் தொகுதி உள்ளிட்ட நான்கு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் இன்று திங்கட்கிழமை (10.08.2026) அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் 102 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஒன்பது மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஏழு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதை குழியில் இந்த மாதம்-08 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது கழுத்துடன் தலை துண்டிக்கப்பட்டு மண்டையோடு இல்லாத நிலையில் இரு கைகளும் கட்டப்பட்டு நெஞ்சுடன் அணைத்த நிலையில் மனித எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுவரை 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.