சென்னை
சென்னை திருவொற்றியூரில் ‘யார் சீனியர்’ என்ற தகராறில் பிளஸ் 2 மாணவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பள்ளி அருகே அரங்கேறிய கொடூரம்:
சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (16). இவர் விம்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளி அருகே உள்ள அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் மாணவர் தனுஷ் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன?:
வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர் ஒருவருக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் இடையே ‘யார் சீனியர்’ என்பதில் இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்த பிளஸ் 1 மாணவர் முன்னாள் மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட கும்பலை அழைத்து வந்து காலி மைதானத்தில் வைத்துத் தனுஷை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
6 பேர் அதிரடி கைது – பெற்றோரின் போராட்டம்:
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தற்போது 6 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்கள் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதற்கிடையே, கொலையாளிகள் அனைவரையும் கைது செய்து உரிய நீதி வழங்கக் கோரி, மாணவர் தனுஷின் பெற்றோர் தொடர்ந்து இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுப்புத் தெரிவித்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#ChennaiCrime #StudentMurder #Thiruvottiyur #ChennaiPolice #JusticeForDhanush #TamilNaduNews #ChennaiNews #CrimeNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates