சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்தில் சூர்யா முதன்மையான வேடத்தில் நடிக்க அவருடன் திரிஷா , நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் , சுவாசிகா, ஷிவதா ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். அதிரடிஎஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு- எஸ் ஆர் பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பட வெளியீடு தொடர்பான திரையுலக வணிகர்கள் – டிஜிட்டல் நிறுவனங்கள்- தயாரிப்பாளர்கள் ஆகியோருடைய ஒருமித்த கருத்து எட்டப்படாததால் படத்தின் வெளியீடு தாமதமாகி கொண்டே வந்தது. இது சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை அளித்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே எதிர்வரும் மே மாதம் ‘கருப்பு’, ஜூலை மாதம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மற்றும் ஆண்டின் இறுதியில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் # சூர்யா 47 என இந்த ஆண்டில் ரசிகர்களுக்கு மூன்று படைப்புகளை வழங்கி சூர்யா உற்சாகப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.