சுவிட்சர்லாந்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சூரிச் நகருக்கு வடமேற்கே உள்ள வின்டர்தூர் (Winterthur) ரயில் நிலையத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் காயமடைந்த 28, 43 மற்றும் 52 வயதுடைய மூன்று சுவிஸ் நாட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் 31 வயதுடைய சுவிஸ் பிரஜை என்றும், அவர் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேரில் பார்த்தவர்களின் சாட்சியம்
அருகிலுள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவர் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கிய தகவலில், காலை 8:30 மணியளவில் ஒருவர் “அல்லாஹு அக்பர்” (இறைவன் மிகப்பெரியவன்) என்று சத்தமிட்டபடி, கத்தியால் மக்களைத் தாக்கத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.
அந்தச் சமயத்தில் ஒரு குழுவாகச் சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பதற்காக, ஒரு ஆசிரியர் அவர்களுக்கு முன்னால் நின்று தடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மற்றுமொரு சாட்சியான டாக்ஸி ஓட்டுநர் கூறுகையில், அந்த நபர் ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சுற்றித் திரிந்து மக்களைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.
சுவிஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் காவல்துறையினரால் தற்காலிகமாக மூடப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.