உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயை (Suresh Salley) நிபுணத்துவ மருத்துவர்கள் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்குப் பணிப்புரை விடுக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை மீதான உத்தரவு, ஜூன் 10 ஆம் திகதி வழங்கப்படும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சல்லே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று, கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த அமரசேன முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான இந்தச் சந்தேக நபர் ஏதேனும் கடுமையான மருத்துவக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார என்பதை நிரூபிப்பதற்கு நியாயமான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் கூற்று:
“கடந்த மே 4 ஆம் திகதி, அவர் ஊட்டச்சத்து நிபுணர், கண் மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர் ஆகியோரிடம் பரிந்துரைக்கப்பட்டார். கொழும்பில் உள்ள தலைமை நீதிமன்ற மருத்துவ அதிகாரி ஊடாக, அப்போதைய நீதவானால் இந்தப் பரிந்துரை உத்தரவிடப்பட்டது. எவ்வாறாயினும், பின்னர் அவர் மற்றொரு அதிகாரி ஊடாக இந்த நிபுணர்களிடம் அனுப்பப்பட்டார். இதற்கான அறிக்கை மே 18 அன்று கிடைத்தது. அறிக்கை கிடைத்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இன்று ஜூன் 4 ஆகும். இந்த மனுவைத் தாக்கல் செய்ய அவர்கள் இரண்டு வாரங்கள் காத்திருந்தனர். ஏன் தெரியுமா? ஏனெனில், அவரால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (writ) மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுதாபத்தைப் பெறும் நோக்கோடே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, கனம் நீதவான் அவர்களே.”