கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற வளாகத்தினுள்ளும் அதன் அருகாமையிலும் பாதுகாப்புப் பணிகளை உறுதி செய்வதற்காக, பெருமளவிலான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக ‘அடா தெரண’ செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ அறிக்கை கோரிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பாக, சட்டமா அதிபர் முன்வைத்த கோரிக்கை மீதான நீதிமன்ற உத்தரவு இன்று வெளியாகவுள்ள நிலையிலேயே இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பரிசோதித்து மருத்துவ அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்காக, விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இன்று வெளியாகும் தீர்ப்பு
இந்த விவகாரம் கடந்த ஜூன் 4ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சுரேஷ் சல்லே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணைக்கு வந்தது.
இதன்போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பிப்புகளை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த விடயம் மீதான தனது தீர்ப்பை வழங்குவதற்காக இன்றைய தினத்தை (10) குறிதிருந்தது.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு இன்றைய தினத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.