முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் குடும்ப உறுப்பினர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களில் அவதூறான உள்ளடக்கங்கள் பரப்பப்பட்டு வருவதாக ‘சர்வஜன பலய’ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை நடத்தப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின் போது உரையாற்றிய சர்வஜன பலய கட்சியின் பிரதித் தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமண, சுரேஷ் சலே சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன், சுரேஷ் சலேயின் மனைவி மற்றும் பிள்ளைகளைக் குறிவைத்து நடத்தப்படும் சமூக ஊடக அச்சுறுத்தல்களையும் அவர் கடுமையாக விமர்சித்ததுடன், இதற்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினரும் அரசியல் செயற்பாட்டாளர்களுமே பொறுப்பு என்றும் குற்றம் சாட்டினார்.
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக இழைக்கப்படுவதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த துறவிகள் மற்றும் பல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த சத்யாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையைக் காவல்துறையினர் அகற்றியதால் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக ” செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்வஜன பலய, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.