இலங்கையின் சுகாதாரத் துறையானது மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் தட்டுப்பாடு, அத்தியாவசிய உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
புற்றுநோய் மருந்துகள் உட்பட பல முக்கிய வகை மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது நோயாளிகளின் பராமரிப்பைப் பாரியளவில் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டில் கணிசமான எண்ணிக்கையிலான விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஓய்வு பெறுவதாலும், புதிய ஆளணி நியமனம் மற்றும் விநியோகத்தில் உள்ள முறையற்ற தன்மையாலும் நிலைமை மோசமடைந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல முக்கிய வைத்தியசாலைகளில் பணிப்பாளர் நாயகம் போன்ற உயர்மட்டப் பதவிகள் நீண்டகாலமாக வெற்றிடமாக உள்ளன. இது முறையான தீர்மானங்களை எடுப்பதில் தடையாக உள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுகாதார அமைச்சு மௌனம் காப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றம் சுமத்தினார். முறையான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலையும் என அவர் எச்சரித்தார்.
மருத்துவ வழங்கல் பிரிவு மற்றும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் போன்ற முக்கிய நிறுவனங்களின் பலவீனமான நிர்வாகம் காரணமாக, ஊழல் மற்றும் மோசடிகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
முறையான மற்றும் துரிதமான தீர்மானங்களை எடுக்கத் தவறுவது இலங்கையின் இலவச சுகாதாரக் கட்டமைப்பை ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் கவலை வெளியிட்டுள்ளது.