நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் பொங்கல் திருநாளன்று திட்டமிட்டபடி படமாளிகையில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர்.
தேசிய விருது பெற்ற படைப்பாளியான இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் . 1965களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான அரசியல் ரீதியிலான போராட்டத்தை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்குகிறது.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில்.. இப்படத்தில் இடம்பெற்ற ‘அடி அலையே..’ எனும் முதல் பாடல் வெளியாகி, 13 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது . இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதியன்று வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது திரையுலக வணிகர்களுடன் நடைபெற்ற விரிவான பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கல் திருநாளான ஜனவரி 14- ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ‘ மதராஸி’ திரைப்படம் நூறு கோடி ரூபாயை வசூலிக்க தவறியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் அவர் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ எனும் திரைப்படம் வெளியாகிறது. மேலும் இந்த திரைப்படம் அரசியல் ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்ப்பதாலும்.. கொள்கை சார்ந்த அரசியலை முன்னிறுத்தி விஜய் நடிப்பில் வெளியாகும் ஜனநாயகன் எனும் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் திகதியன்று வெளியாவதாலும்… இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.