நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “மோதலின்” போது உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதி ஒருவரின் உறவினரான நந்தினி, பிபிசி சிங்கள சேவையிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
“எனது மகன் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன். எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். நேற்றைய தினம் அவர்கள் அவனை அடித்துக் கொன்றுவிட்டனர். தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச் சுட்டு, எனது மகனுக்குப் புதியவர்களுக்கு வழங்கப்படும் வதையை (Ragging) கொடுத்துக் கொன்றுவிட்டனர். எனது மகனின் சடலம் இன்னும் நீர்கொழும்பு மருத்துவமனையிலேயே உள்ளது.”
“எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள். அந்தப் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். உயிருடன் இருக்கும் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படையுங்கள், நான் சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் மேலும் உருக்கமாகத் தெரிவித்தார்.
அதேபோல…
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் கைதிகளின் உறவினர்கள் இன்னும் திரண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அவர்களில் ஒருவரான ரி. எம். ஞானதிலக, சிறைச்சாலையில் உள்ள “தங்கள் பிள்ளைகள் இருக்கும் இடம் குறித்த எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை” என்று கவலையுடன் தெரிவித்தார்.
“நேற்றைய தினத்திலிருந்து இந்தச் சிறைச்சாலையில் மோதல் ஒன்று இடம்பெற்று வருகிறது. எதனால் இந்த மோதல் ஏற்பட்டது என்ற காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்.”
“எங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு பார்க்க அனுமதிக்கவில்லை; இங்கே வந்தாலும் உள்ளே பார்க்க அனுமதிப்பதில்லை. இங்கிருப்பவர்கள் யாராவது ஒருவராவது, பிள்ளைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொல்ல வேண்டும்.”
“ஒன்று, பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்; அல்லது உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலையாவது வெளியிட வேண்டும். குறைந்தது, உயிரோடு இருப்பவர்களின் பட்டியலையாவது எங்களுக்குத் தர வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு சிறையிலும் பதற்றம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.