இலங்கை முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து விட்டன. இது போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(19.06.2026) ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 17 ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் தன்னுடைய 12 வயது மகளை ஆண் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்திய காரணத்தால் அவர் அவமானம் தாங்க முடியாது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இது இலங்கை தேசத்துக்கு ஒரு பரிதாபகரமான செயலாக பார்க்கப்படுகிறது.
இதனை தடுக்காவிட்டால் சிறுவர் துஷ்பிரயோகத்தால் அந்த சிறுவர் மட்டுமல்ல அவரது பெற்றோர், உறவினர்கள் உட்பட அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான குற்றச் செயலை தடுப்பதற்கு அதி உச்ச தண்டனை மரண தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன், அந்தந்த பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் பிரஜாசக்தி தலைவர்கள், அந்த ஊரில் இருக்கும் தேவாலயங்கள் ஆலயங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து கூடிய கவனம் செலுத்தி இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாய் தந்தை தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அல்லது தாய் இல்லாமல் தந்தையுடனும் தந்தை இல்லாது தாயுடனும் 18 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு இல்லாத சிறுவர்கள் இருக்கின்றனர்.
எனவே, இவர்களுடைய பாதுகாப்பில் கருத்தில் கொண்டு கிராம உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசத்தி உறுப்பினர்கள், கூடுதல் கவனம் செலுத்தி இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
அதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மற்றும் பெண்களை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர்கள் உள்ளிட்ட குற்றங்களை செய்தவர்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்காக தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.