முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குச் சிகிச்சை அளித்த உள்நாட்டு மருத்துவர்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இலக்கு வைத்து விசாரணை நடத்தி வருவதால் மேலதிக சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது குறித்து மேலும் கூறியதாவது:
மருத்துவர்கள் மீதான நெருக்குதல்: ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களைக் குறிவைத்து சிஐடி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாகவே அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசாங்கத்தின் மீதான விமர்சனம்: தற்போதைய அரசாங்கம் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்தே ஆட்சிக்கு வந்தது. மற்ற எந்தக் கட்சியை விடவும் இந்த அரசாங்கம் பொதுமக்களிடம் அதிகளவில் பொய்களைக் கூறியுள்ளது.
எதிர்காலத்தில் அரசியல் லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பொய்களைப் பரப்புவதைத் தவிர்ப்பது நாட்டுக்கு அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.
ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் சிங்கப்பூரில் ஒரு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சிஐடியினர்விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே வஜிர அபேவர்தன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.