இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு சமூக ஊடகங்கள் தீர்ப்பு வழங்கும் இடமல்ல. பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகள் மூலமே உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை செய்திகள்
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.Language Resources
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் மரணங்கள் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளன. கபில சந்திரசேனவின் மரணம், அதனைத் தொடர்ந்து ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம், மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் என இந்த அனைத்து மரணங்களுமே சந்தேகத்துக்கு உரியவையாகவே காணப்படுகின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பில் உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்குக் கூற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.
இவ்வாறான விபரீதங்கள் நிகழும்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி உண்மைகளை மறைக்கவோ அல்லது திசைதிருப்பவோ அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. இதற்கான சரியான வழிமுறைகளை உருவாக்கி, பொலிஸாரின் முறையான விசாரணைகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளை முன்னெடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக நீதிமன்றத்தின் மூலமே இதற்கான தீர்ப்பும் நீதியும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் தீர்ப்பு வழங்கும் இடமல்ல.