தமக்கான பயணப்படியை அதிகரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையைக் கண்டித்து, நாளை (10) திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை (11) ஆகிய இருநாட்கள் நோய் விடுப்புப் (Sick leave) பதிவுசெய்து கடமைகளில் இருந்து விலகியிருக்க கிராம நிலதாரிகள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கிராம நிலதாரி தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
கிராம நிலதாரிகளுக்கு வழங்கப்படும் ரூ. 600 பயணப்படியானது கடந்த எட்டு வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள பயணப்படிக்கு பதிலாக 20 லீட்டர் எரிபொருளின் விலைக்கு நிகரான தொகையை வழங்வதற்கு 2024 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தபோதிலும், அது இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிராகவும், தமது ஏனைய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த இருநாள் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நந்தன ரணசிங்க மேலும் தெரிவித்தார்.