சென்னை:
காவிரி நீர் உரிமை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேறுபாடின்றி ஒன்றாக நிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கிற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தும் மெத்தனப்போக்குடன் செயல்படும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து உரிய அழுத்தம் கொடுக்க முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்துவது எனவும், நதிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாண ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “அரசியல் போராட்டத்தின் மூலமாகத்தான் நாம் வெல்ல முடியும். எதிர்தரப்பில் நிற்பவர்கள் எவ்வளவு உறுதியாக நிற்கிறார்களோ, அதேபோன்று நாமும் உறுதியாக நிற்க வேண்டும். கட்சி, கொள்கை, சித்தாந்த வேறுபாடுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு, மக்களின் உயிர் உரிமையான நீர் உரிமைக்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் தமிழகத்தில் இருந்து பெறப்படும் போது, நீர் உரிமையை மட்டும் மறுப்பது எந்த வகையில் நியாயம்? மேகதாதுவில் அணை கட்டியே தீரவேண்டும் என கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் நிற்கின்றன. அதுபோலத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் நிற்க வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர்கள், வரும் 7-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரே அணியில் திரள வேண்டும் எனக் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர்.
#Seeman #CauveryIssue #MekedatuDam #PuthiyaTamilagam #Krishnasamy #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #CMVijay #AllPartyMeeting #PoliticalUpdate #TamilNewsLive