தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவடைந்து ஆழ்கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அதே பிராந்தியத்தில், திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 720 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்மேற்கு மற்றும் அண்மைய மேற்கு – மத்திய வங்காள விரிகுடாவில் புயலாக மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர், இது வடமேற்கு நோக்கி நகர்ந்து செவ்வாய்கிழமைக்குள் தீவிர புயலாக வலுவடையக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 17ஆம் திகதி முதல் நாட்டின் பல மாவட்டங்களிலும் கடும் காற்றுடனான மழை பெய்து வருகிறது. இதனால் குருணாகல், புத்தளம், அநுராதபுரம், பதுளை, மொனராகலை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டங்களில் 7944 குடும்பங்களைச் சேர்ந்த 31 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, 847 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்தோடு 132 குடும்பங்களைச் சேர்ந்த 544 பேர் 4 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீன்பிடி தொழிலாளர்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடலில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 55 – 65 கி.மீ வரை அதிகரித்து, சில நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், அந்தக் கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.