அஸ்திரேலியாவில் ஜனவரியில் உயிரிழந்த கனேடிய சுற்றுலாப் பயணி, டிங்கோ தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகே நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் காம்பெல் ரிவர் நகரைச் சேர்ந்த 19 வயதான பைப்பர் ஜேம்ஸ், ஜனவரி 19 அன்று அஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலக் கடற்கரைக்கு அருகிலுள்ள மணல் தீவான கே’காரி (K’gari) பகுதியில் உள்ள ஒரு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த தீவு பிரிஸ்பேன் நகரத்திலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது.
“பல காயங்களுடன் கூடிய நிலையில், டிங்கோ தாக்குதலின் காரணமாக அல்லது அதன் விளைவாக ஏற்பட்ட மூழ்கி இறப்புதான் பைப்பரின் மரணத்துக்குக் காரணம்,” என்று குயின்ஸ்லாந்து கொரோனர்ஸ் நீதிமன்றத்தின் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
மேற்படி பெண்ணின் மரண விசாரணை குறித்து நியமிக்கப்பட்ட உடற்கூறு நிபுணர் பைப்பர் ஜேம்ஸின் அறிக்கையிடலை வைத்தே மரணம் குறித்த முடிவை நிர்ணயித்ததாகவும் அந்த முடிவை விசாரணை மேற்கொண்ட கொரோனர் ஏற்றுக்கொண்டதாகவும் குயின்ஸ்லாந்து கொரோனர்ஸ் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இரவு உறுதிப்படுத்தியது.