ஆர்ட்டெமிஸ் II விண்கலம் நிலவைச் சுற்றியுள்ள தனது வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், கனடிய விண்வெளி வீரர் கர்னல் ஜெரமி ஹேன்சன், பூமியில் இருக்கும் பிரதமர் மார்க் கார்னியுடன் விண்வெளியில் இருந்து நேரடி உரையாடலில் ஈடுபட்டார்.
விண்வெளியில் ஒரு கனடியர் இருப்பதைப் பார்ப்பதும், அங்கிருந்து அவர் பிரெஞ்சு மொழியில் பேசுவதைக் கேட்பதும் கனடாவிற்குப் பெரும் பெருமை என்று பிரதமர் கார்னி புகழாரம் சூட்டினார்.
நிலவுக்குச் சென்ற முதல் கனடியர் என்ற பெருமையை ஜெரமி ஹேன்சன் பெற்றுள்ளார். ஆர்ட்டெமிஸ் II விண்கலம் பூமியில் இருந்து 4,06,773 கிலோமீட்டர் தொலைவை எட்டியதன் மூலம், இதற்கு முன்பு அப்பல்லோ 13 விண்கலம் படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்த உரையாடலின் போது பிரதமர் கார்னி, “ஜெரமி ஹேன்சனின் இந்தச் சாதனை கனடியர்களின் விடாமுயற்சி மற்றும் குழுப்பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.