கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட ‘கஜபா வெட்டை’ எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் மருமகன் ஆவார்.
மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது உடல் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற யாத்திரிகர் உயிரிழந்திருந்தார். மேலும், கடந்த 8ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் பொத்துவில், குண்டுமடு பகுதியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கதிர்காம பாதயாத்திரையின் போது இடம்பெற்றுள்ள மூன்றாவது மரணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.