ஒன்டாரியோ அரசு 174 மில்லியன் டொலர் முதலீட்டுடன் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை (Stevenson Memorial Hospital)புனரமைப்புத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. மேலும் நியூ டெகம்செத் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டு அருகில் வசதியான மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்கும் அரசின் இலக்கை நிறைவேற்றவும் இது உதவும் என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஒன்டாரியோ முழுவதும் 50க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனை திட்டங்களுக்கு சுமார் 60 பில்லியன் டொலர் முதலீடு செய்யும் அரசின் சுகாதார அமைப்பை பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே மேற்படித் திட்டமாகும்.
மேலும் அதிக உள்நோயாளர் படுக்கைகள், விரிவாக்கப்பட்ட பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள், தற்போது உள்ளதைவிட மூன்று மடங்கு பெரிய அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றுடன் புதிய ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை சிம்கோ பகுதி முழுவதும் உள்ள நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு உலகத் தரத்திலான சுகாதார சேவையை வழங்கும்.
ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை புனரமைப்பு திட்டம் 2028க்குள் நிறைவேறும். இதன் கீழ் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்படுவதுடன், மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும். இதன் மூலம் மருத்துவமனையின் பரப்பளவு 147,100 சதுர அடி வரை அதிகரித்து, தற்போதைய அளவின் இரட்டிப்பை விட அதிகமாகும். மேலும் உள்நோயாளர் படுக்கை திறன் 20% அதிகரித்து, சமூகத்திற்கு அதிக சிகிச்சை வாய்ப்புகள் கிடைக்கும்எனவும் முதல்வர் டக் பேர்ட் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த முதலீட்டின் மூலம் ஒன்டாரியோ சுகாதார அமைப்பை பாதுகாக்கும் முயற்சியை எங்கள் அரசு வலுப்படுத்துகிறது. மேலும் நியூ டெகம்செத் மற்றும் சிம்கோ கவுண்டி முழுவதும் உள்ள மக்களுக்கு தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் சிகிச்சையை எளிதாக பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஒன்டாரியோ துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் (Sylvia Jones) தெரிவித்தார்.