மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “இனப்படுகொலை கொள்கைகள்” மூலம் அந்த இனத்தையே அழிக்க மியன்மார் முயன்றதாக காம்பியா நாடு ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியா, கடந்த 2019ஆம் ஆண்டு மியன்மாருக்கு எதிராகத் தொடர்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணைகள் திங்கட்கிழமை(12) நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஆரம்பமானது.
மியன்மார் இராணுவம் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழிக்க முயன்றதாக காம்பியாவின் வெளிவிகார அமைச்சர் டவ்டா ஜாலோ (Dawda Jallow) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறையின் போது ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 700,000-க்கும் அதிகமானோர் அண்டை நாடான பங்களாதேஷிற்கு அகதிகளாகத் தப்பிச் சென்றனர்.
பல தசாப்தங்களாக ரோஹிங்கியாக்கள் கொடூரமான துன்புறுத்தல்களுக்கும், மனிதநேயமற்ற அவதூறு பிரச்சாரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாக காம்பியா சுட்டிக்காட்டியுள்ளது.
காம்பியாவின் இந்த முயற்சிக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பு நாடுகளும், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட 11 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
“மியன்மார் இழைத்த கொடூரமான குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாம் கோருகிறோம். இனப்படுகொலை செய்த மியன்மார் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த அகதிப் பெண் மொனைரா தெரிவித்துள்ளார்.
மியன்மார் இராணுவம் இந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகவே தமது நடவடிக்கைகள் அமைந்ததாக மியன்மார் தரப்பு வாதிடுகிறது. இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் மியன்மார் தனது பதில்களை வழங்க வாய்ப்பளிக்கப்படும்.
1948ஆம் ஆண்டு ஐநா இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கு போன்ற ஏனைய சர்வதேச வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் மிக நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.