ஞாயிற்றுக்கிழமை இரவு ஏயர் கனடா ஜாஸ் (Air Canada Jazz) விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலையம், திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் குறித்த விமானத்தின் விமானி (Captain) மற்றும் உதவி விமானி (First Officer) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மொன்றியலில் இருந்து வந்த இந்த விமானம், விமான நிலைய தீயணைப்பு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் அதன் காக்பிட் (Cockpit – விமானி அறை) முழுமையாக சிதைந்து போனது. இதில் விமானத்திலிருந்த மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக ஜாக்சன் ப்ரோஸ்கோ (Jackson Proskow) தெரிவிக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு லாகார்டியா விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரண்டு ஏயர் கனடா விமானிகள் அன்டோயின் ஃபாரஸ்ட் (Antoine Forest) மற்றும் மெக்கன்சி குந்தர் (Mackenzie Gunther) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கியூபெக்கில் (Quebec) உள்ள கோட்டோ-டு-லாக் (Coteau-du-Lac) நகர சபையின் முகநூல் பதிவு மூலம் ஃபாரஸ்ட் அடையாளம் காணப்பட்டார்.
“கோட்டோ-டு-லாக் நகர சபையும் அதன் உறுப்பினர்களும் அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரத்திலிருந்து மீள அவர்களுக்குத் தேவையான அனைத்து மனவலிமையும் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்,” என்று பிரெஞ்சு மொழியிலிருந்த அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்கன்சி குந்தர் இந்த விமானத்தின் உதவி விமானியாகப் பணியாற்றினார் என்று செனெகா கல்லூரி (Seneca College) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் எமது முன்னாள் மாணவர் மெக்கன்சி குந்தர் உயிரிழந்தமைக்காக செனெகா கல்லூரி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“குந்தர் 2023-ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து தொழில்நுட்பத்தில் கௌரவ இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பை முடித்தவுடன் ‘ஜாஸ் ஏவியேஷன் பாத்வேஸ்’ (Jazz Aviation Pathways) திட்டத்தின் மூலம் தனது தொழில்முறை விமானி வாழ்க்கையைத் தொடங்கினார்.”
இந்த விமானத்தில் 72 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்தனர். விபத்தைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்த இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கம் (Partial government shutdown) காரணமாக ஏற்கனவே விமான நிலையங்களில் பாதிப்பு நிலவிய சூழலில், நியூயோர்க் பிராந்தியத்தின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமான லாகார்டியா இந்த விபத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டது. இவ்விபத்து குறித்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.