நல்லாட்சி காலத்தில் நாம் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்ட போதிலும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்முடன் இருக்கவில்லை. சிலர் எதிர்க்கட்சிக்கான பொறுப்புக்களை நிறைவேற்றிய போதிலும், சிலர் அரசாங்கத்துடன் இருந்தனர். எமது ஆட்சி காலங்களில் எதிர்க்கட்சிகள் திரைமறைவில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. இதுவே அரசியல் யதார்த்தமாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சோனி அல்ஃபா பண்டிகை – 2025 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாமல் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். கட்சி என்ற ரீதியில் அரசியலில் நாம் எம்மை பலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நாடளாவிய ரீதியில் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலம்மிக்க அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.
இந்த அரசாங்கம் ஆட்சியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர்பாரிய பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றினர். வரையறையின் மக்களுக்குவாக்குறுதிகளை வழங்கினர். அரச பொறிமுறை, பொலிஸ் என்பன முற்றாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன. அரச பொறிமுறை மற்றும் பொலிஸில் உள்ளிட்ட நேர்மையான அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சியேற்றதன் பின்னர் எந்தவொரு சர்வதேச முதலீட்டாளர்களும் எந்த துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை.வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அரசாங்கம் ஆர்வம் காண்பிக்கவோ முயற்சிக்கவோ இல்லை. தொழில்களை உருவாக்குவதற்கான திட்டமிடல்கள் அரசாங்கத்திடம் இல்லை. இவை தொடர்பில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என நாம் தீர்மானித்தோம்.
அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் பயணிக்க தீர்மானித்தோம். எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டங்களை நடத்துவது இது முதலாவது சந்தர்ப்பம் அல்ல. ஜே.வி.பி. இதற்கு முன்னர் சகல எதிர்க்கட்சிகளுடனும், அரசாங்கங்களுடனும் இணைந்து செயற்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவது என்பது இரண்டாம் பட்சமாகும். அது குறித்து தேர்தல் காலங்களில் தீர்மானித்துக் கொள்ளலாம். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்காக நின்ற கட்சியாகும். நாட்டின் ஒற்றுமைக்காக முன்னின்ற சக்தி என்ற ரீதியில், அதற்கான தலைமைத்துவத்தை எப்போதும் வழங்குவோம்.
அந்த வகையில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்திருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இதற்குள் சில கட்சிகளுக்கு முரண்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. 2015 நல்லாட்சி காலத்தில் நாம் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்ட போதிலும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்முடன் இருக்கவில்லை. சிலர் எதிர்க்கட்சிக்கான பொறுப்புக்களை நிறைவேற்றிய போதிலும், சிலர் அரசாங்கத்துடன் இருந்தனர்.
நாம் ஆட்சி செய்ய போதும் எதிர்க்கட்சிகள் திரைமறைவில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. அதுவே அரசியல் யதார்த்தமாகும். அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் நேர்மையாக எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று நம்புகின்றோம். அதற்காக மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். அரசாங்கத்தின் பொய்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றார்.