மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காப்புறுதி நிறுவனங்களான கார்ட், ஸ்கல்ட், மற்றும் லண்டன் பி&ஐ கிளப் போன்றவை பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கான ‘போர் கால இடர் காப்புறுதியை’ மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் இரத்து செய்துள்ளன.
கடந்த வாரம் கப்பல் பெறுமதியில் 0.2 சதவீதமாக இருந்த காப்புறுதி கட்டணம், தற்போது 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உதாரணமாக, 100 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் ஒன்றுக்கான காப்புறுதி கட்டணம் 02 இலட்சம் டொலரிலிருந்து 10 இலட்சம் டொலர் வரை அதிகரித்துள்ளது.
காப்புறுதி கட்டண அதிகரிப்பு மற்றும் கப்பல்கள் மாற்றுப் பாதையில் பயணிப்பதால் ஏற்படும் மேலதிக செலவுகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை இலங்கையில் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் பேச்சாளர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதால் இலங்கையை வந்தடைவதற்கு மேலதிகமாக 10 முதல் 14 நாட்கள் வரை தாமதமாகும்.
ஆடை மற்றும் இறப்பர் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் 20 சதவீத மசகு எண்ணெய் விநியோகம் ஹோமுஸ் நீரிணை ஊடாகவே இடம்பெறுகிறது. தற்போது இப்பாதை மூடப்பட்டுள்ளதால், மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 டொலரைக் கடந்துள்ளது.
இது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.