இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு இணங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமைச் சேர்ந்த அதிகாரிகளும் இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து, கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உத்தகந்த பகுதியில் கடந்த 01 ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 282 கிலோகிராம் உலர் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த உலர் கஞ்சா தொகையின் சந்தைப் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாவாகும் (150 மில்லியன் ரூபாய்) என்பதுடன், கஞ்சா பாறையின் மீது காயவைக்கப்பட்டு விற்பனை செய்வதற்காகப் பொலித்தீன் சாக்குகளில் பொதி செய்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த உலர் கஞ்சா தொதியுடன் மித்தெனிய, ஜுலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரையும் உலர் கஞ்சா தொகையையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகக் கொஸ்லந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஏ. எம். டினெத் குமார உள்ளிட்ட பரிவார அதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் இணைந்து இந்தச் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.