பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர கத்தாரும் துருக்கியும் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.
ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்து இருந்தது.
இதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் இரு தரப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் முல்லா முஹம்மது யாக்கூப் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சண்டை நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நீடிக்கசெய்வதற்கும் வரும் நாட்களில் தொடர் கூட்டங்களில் பேசி முடிவுக்கு வரவும் இரு தரப்பினரும் சம்மதித்துள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வரும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
maalaimalar