இலங்கைக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாக ஈரான் விடுத்த அழைப்பைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சொந்தமாகக் கப்பல்களைக் கொண்ட நாடுகளே இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், இலங்கையிடம் அத்தகைய வசதி இல்லை என்றும் நேற்று தெரிவித்தார்.
இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக அந்த நாட்டுத் தூதுவர் தெரிவித்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்:
“சொந்தமாக கப்பல்களைக் கொண்டுள்ள நாடுகள் இத்தகைய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எங்களிடம் சொந்தமாகக் கப்பல்கள் இல்லை, எனவே ஈரானில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் தற்சமயம் எங்களிடம் இல்லை. எனினும், தூதுவரின் இந்த முன்மொழிவை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று கூறினார்.
இலங்கைக்கான ஈரான் தூதுவர் டாக்டர் அலிரேசா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh), ஈரானை ஒரு “நட்பு நாடு” என்று குறிப்பிட்டு, இலங்கை கோரிக்கை விடுத்தால் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்