ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அலிரேசா டங்சிரி பற்றிய ஒரு சிறு குறிப்பு
அலிரேசா தங்சிரி 2018-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, 2010 முதல் IRGC கடற்படையின் துணைத் தளபதியாகப் பணியாற்றி வந்தார்.
இந்த ஆண்டு மார்ச் 10 முதல் அவரது பெயரிலான எக்ஸ் (X) கணக்கு ஒன்று செயல்பாட்டில் உள்ளது; அதன் பதிவுகளை ஈரான் ஊடகங்கள் மேற்கோள் காட்டி வருகின்றன. அந்தப் பதிவுகளில், அவர் ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) குறித்து பலமுறை பதிவிட்டுள்ளார். “ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் கடந்து செல்ல உரிமையில்லை” என்று அக்கவுண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தங்சிரி ஒரு வெளிப்படையாகப் பேசும் தளபதி ஆவார். அவர் கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை ஏற்பட்டால் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிடுவோம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார். நீர்ச்சந்திக்கு அருகே அமெரிக்காவின் உளவு ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, 2019-இல் அமெரிக்க கருவூலம் தங்சிரி மற்றும் இதர IRGC தளபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.