ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 6 மாதங்களுக்குள் 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலிலிருந்து விலகியிருந்த கடந்த ஓராண்டு காலத்தில், அடுத்து என்ன செய்வது என்று ஆழமாக சிந்தித்தோம். ஐக்கிய தேசிய கட்சி என்பது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் முன்வந்து, அவற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பாக மீட்டிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடுக்கு செய்ய வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்துவிட்டார். எஞ்சியவற்றை முன்னெடுப்பதற்கு நாம் ஆயத்தமாகியுள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய வேவைத்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அரசாங்கத்தின் மீது குறை கூறிக் கொண்டிருக்கும் அரசியலை நாம் முன்னெடுக்கப் போவதில்லை.
அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அந்த இலக்கை நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன்.
ஐக்கிய தேசிய கட்சியின் எம்மைப் போன்ற உறுப்பினர்களுடன் ஆதரவாளர்களும் இணைந்து தான் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. அந்த ஆதரவாளர்கள் இன்று இவ்விரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.
தலைவர்கள், ஏனைய உறுப்பினர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தாலும், கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாடு இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதேயாகும். மாறாக இரு கட்சிகளும் இணையாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், ஐ.தே.க.வில் இணைவதை தடுக்க முடியாது.
அத்தோடு மக்களுக்காக பொறுப்புள்ள ஒரு பொது எதிரணியை உருவாக்குவதற்கும் முயற்சிக்கின்றோம். அனைத்து கட்சிகளும் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் தயாராகவுள்ளன.
நாட்டில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் பொது எதிரணியாக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். நாட்டுக்காக எதனையும் செய்யாத, செய்வதற்கு இடமளிக்காத குழுவினரே தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த மக்கள் நலன் திட்டங்களுக்கு பெயரை மாற்றி, புதிய திட்டங்களாக இவர்கள் முன்னெடுக்கின்றனர். அதனை தவிர இவர்களுக்கு தனித்து சுயமாக ஆட்சியை முன்னெடுக்கும் திறன் இல்லை.
எனவே அடுத்து ஆட்சியைப் பொறுப்பேற்கக் கூடிய புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
6 மாதங்களுக்குள் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ‘ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டமொன்றை அடுத்த மாதம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
இளைஞர்களை ஒருங்கிணைத்து 2 மணித்தியால செயற்றிட்டமாக இது முன்னெடுக்கப்படும். இரு வாரங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ஆம் திகதி இலங்கையில் முற்றுமுழுதான டிஜிட்டல் கட்சியான ஐ.தே.க.வை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவார்.
இவற்றுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.