வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் விசாரணைகளை இன்னமும் முடிவுறுத்தவில்லை. அவ்வாறிருக்கையில் நீதியமைச்சரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது? என சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ‘இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல்போனோர் குறித்த மதிப்பீடுகளில் இன்னமும் கணிசமானளவு நபர்கள் கணக்கில் வராமல் உள்ளனர் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.
இந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் மாறுபடுகின்றன. எவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அண்மைய மதிப்பீடுகளின்படி அந்த எண்ணிக்கை 2,764 ஆகும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் வெளியிட்ட இந்தத் தகவலை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கும் சட்டத்தரணியும் சிவில் செயற்பாட்டாளருமான ஐங்கரன் குகதாசன், அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்தத் தரவுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பதை அறிய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் (சுமார் 5000 முப்படை உறுப்பினர்கள் உட்பட) அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் விசாரணைகளை இன்னமும் முடிவுறுத்தவில்லை. அவ்வாறிருக்கையில் அமைச்சரால் எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கை முன்வைக்கப்பட்டது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை இது மிகமுக்கியமான கேள்வி எனக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் அலன் கீனன், காணாமல்போனோரின் எண்ணிக்கை நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகம் என்பது சகல ஆய்வாளர்களுக்கும் சுயாதீன அவதானிகளுக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.