ரஷ்ய பாதுகாப்புப் பிரிவுகளின் வசம் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரொட்டும்ப அமிலவுக்கு எதிராக ரஷ்ய நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு முடிவடையும் வரை அவரை இலங்கையிடம் ஒப்படைக்க முடியாது என, அந்த நாட்டின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி ரஷ்யாவிற்குள் நுழைந்த அவரை, சர்வதேச பொலிஸின் சிவப்பு அறிவித்தல் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம், ரஷ்ய பொலிஸார் கைது செய்தனர்.
ரொட்டும்ப அமில எனப்படும் பாதாள உலக உறுப்பினர் ரஷ்யாவில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவுகளால் கைது செய்யப்பட்டதாக, ரஷ்யா சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) ஊடாக இலங்கையின் அதிகாரிகளுக்கு கடந்த மார்ச் மாதமே உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
அவர் பிடிபடும் போது மேலும் சில நபர்கள் அவருடன் இருந்த போதிலும், அவர்கள் குறித்து இலங்கைக்கு இதுவரை எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ரொட்டும்ப அமிலவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு, அவர் ரஷ்யாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை தொடர்பானது.
இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ரொட்டும்ப அமிலவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அனைத்து தகவல்களும் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.