சுமார் 37,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மார்ச் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் 37,000 மெற்றிக் தொன் பெற்றோல் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பே தற்போதைய விலை மாற்றங்களுக்குப் பிரதான காரணமாகும். மார்ச் 25 ஆம் திகதி மேலும் 37,000 மெற்றிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது பாரிய நட்டத்தையே எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேற்று சனிக்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மத்தியிலும், பொதுமக்கள் மீதான சுமையை குறைக்க அரசாங்கம் பெரும் தொகையை மானியமாக வழங்குகிறது. அதன்படி, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.
இந்த மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கம் மாதமொன்றுக்கு மேலதிகமாக 20 பில்லியன் ரூபா செலவை ஏற்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.