நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டில் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டு 18 நாட்கள் கடந்துள்ளபோதும் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பீட்டு தொகையை உறுதியாக தெரிவிப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்ட 25ஆயிரம் ரூபா தொகையே இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வழங்குவதிலும் ஒருசில பகுதிகளில் அது அரசியலாக்கப்பட்டுள்ளது. அதனால் 25ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறாத மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையில் விரக்தியடைந்துள்ளனர்.
அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்த 5மில்லியன் கோடி ரூபாவை எவ்வாறு அரசாங்கம் வழங்கப்போகின்றது.? அத்துடன் இடம்பெற்ற அனர்த்தத்தினால் நாடுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் நிதி அடிப்படையில் அதன் மதிப்பீடு என்ன? இந்த விடயங்களை அறிந்துகொள்ளவும் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவும் தெரியாத தகவல்களை அறிந்துகொள்ளவும் அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி, ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் இரண்டு நாள் விவாதம் ஒன்றுக்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
ஏனெனில் இம்பெற்ற அனர்த்தத்தில் மொத்தமாக எத்தனை வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையான தகவல் யாருக்கும் தெரியாது. அதனால் ஊடகங்கள் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நாளுக்கு நாள் முரண்பட்ட எண்ணிக்கையை தெரிவித்து வருகின்றன.
உண்மையான தகவல் தெரியாமர் இருப்பதாலே இவ்வாறு மாறுபட்ட எண்ணிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றத்தை கூட்டி, அனர்த்தம் தொடர்பில் பூரண தெளிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.
2003ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் 24ஆயிரம் வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன. சுமார் 50ஆயிரம் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்தமுறை இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகும். என்றாலும் 6ஆயரம் வீடுகளே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதனாலே பாராளுமன்றத்தை கூட்டி இதுதொடர்பில் விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம்.
அதேநேரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, நத்தார் தாத்தா போன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் தொகையை அறிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான வழியை அமைத்துக்கொண்டார். தற்போது வேறு கதைகளை தெரிவித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நட்டஈட்டு தொகையை வழங்குவது என அரசாங்கத்துக்கு தெரியாமல் இருப்பதே இதற்கான காரணமாகும் என்றார்.