மின்சாரம் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு மாலை 3 மணிக்கு பின்னர் அரச நிறுவனங்களில் சகல குளிரூட்டி சாதனங்களையும், மாலை 06 -10 மணிவரையான காலப்பகுதியில் வீதி விளக்குகளை அணைத்தல் வேண்டும் என பல அறிவுறுத்தல்களை முன்வைத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் இரண்டாவது வழிகாட்டல் அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியின் கையொப்பத்துடன் குறித்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டல் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சகல அரச நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் மாலை 3.00 மணிக்க பின்னர் சகல குளிரூட்டி சாதனங்களையும் செயலிழக்கச் செய்தல் வேண்டும்.
தனியார் துறையினரும் இந்த வழிகாட்டலை பின்பற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இரவு 08 மணிக்குப் பின்னர் சந்தைப்படுத்தல் விளம்பரங்களை பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் திரைகளை அணைத்தல் வேண்டும். மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள வீதி விளக்குகளை மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் அணைப்பதற்குரிய பொருத்தமான விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சகல வழிகளிலும் பாரியளவில் நடத்தப்படும் (100 நபர்களுக்கு மேல் பங்குப்பற்றலுடன்) நிகழ்வுகள், இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு தேசிய மின் கட்டமைப்பில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாமல் அவற்றை நடத்த வேண்டும்.