தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு சக்திகள் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து நிலவும் கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என்பது தான் முக்கிய பிரச்சினையாக இருப்பதாக வொஷிங்டனை தளமாகக்கொண்டு இயங்கிவரும் இந்து சமுத்திரப்பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் நிலாந்தி சமரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ‘ஈரான் கப்பல் விவகாரத்தில் மூன்று கப்பல்கள் நாட்டுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்வதற்கு கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதுகுறித்து நாங்கள் ஆராய்ந்துவந்த நிலையில், அன்றைய தினம் மாலை ஐக்கிய அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரப்பட்டது. போர் மூழும் சூழல் நிலவியதால், நாம் அவ்விரு தரப்பினரின் கோரிக்கைக்கும் அனுமதி வழங்காமல் நடுநிலையாக செயற்பட்டோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலகளாவிய ரீதியில் போர் பதற்றம் தீவிரமடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட இந்தத் தகவல் சர்வதேச மட்டத்தில் விசேட கவனம் பெற்றிருக்கிறது.
அதன்படி வொஷிங்டனை தளமாகக்கொண்டு இயங்கிவரும் இந்து சமுத்திரப்பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் நிலாந்தி சமரநாயக்க, ஜனாதிபதி வெளியிட்ட இத்தகவலை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அப்பதிவில் அம்பாந்தோட்டைக்கு அருகே மத்தள விமானநிலையத்தை நிர்மாணிப்பதில் சீனாவின் வகிபாகம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவும் போதிலும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அந்த விமானநிலையத்துக்குள் உட்பிரவேசிக்க விரும்புவது முரணானதொரு விடயமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு சக்திகள் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து நிலவும் கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என்பது தான் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.