வியாழக்கிழமையன்று இந்தியாவின் தலைநகரில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் (BIMSTEC) பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், நேற்று இலங்கை, தாய்லாந்து, வங்களாதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்த அவர்கள், முக்கிய உலகளாவிய நடப்பு விவகாரங்கள் குறித்தும் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், 5-வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்திற்கு இடையே, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தவை (ஓய்வுபெற்ற) நேற்று சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் விவகாரங்கள் குறித்தான இருதரப்பு கூட்டு உத்திகள் பற்றி அவர்கள் விவாதித்தனர். அத்துடன் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியா தனது அண்டை நாடுகளுடனான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தி வரும் ஒரு முக்கிய காலகட்டத்தில், அண்டை நாட்டுத் தலைவர்களுடனான இந்த உயர்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்தியா நடத்தும் ஐந்தாவது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் (BIMSTEC) என்பது ஜூன் 6, 1997 அன்று பேங்காக் பிரகடனத்தில் (Bangkok Declaration) கையெழுத்திட்டதன் மூலம் நிறுவப்பட்ட ஒரு முக்கியமான பிராந்திய அமைப்பாகும். ஆரம்பத்தில் ‘BIST-EC’ (வங்களாதேசம்-இந்தியா-இலங்கை-தாய்லாந்து பொருளாதார ஒத்துழைப்பு) என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது பிம்ஸ்டெக் என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் 22, 1997 இல் மியான்மரும், பிப்ரவரி 2004 இல் பூட்டான் மற்றும் நேபாளமும் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது இதில் ஏழு உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.