டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன அமைப்புகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்குடன், பதுளை மாவட்டத்தில் நேற்று இரு வார கால சீரமைப்புத் திட்டம் ஆரம்பமானது.
எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கை காலத்திற்கு முன்னர் நீர்வழங்கல் கட்டமைப்புகள் முழுமையாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் அளித்த தகவலின்படி, சூறாவளியின்போது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால், குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள் மற்றும் அணைகட்டுகள் உள்ளிட்ட 1,020 நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறும் இந்தச் சீரமைப்பு முயற்சி, 50 பிரதான வேலைத் தளங்களை உள்ளடக்கவுள்ளது. இந்த பாரியளவிலான சீரமைப்புப் பணி ஒரு கூட்டுத் தன்னார்வ நடவடிக்கையாக முன்னெடுக்கப்படுகிறது.
இதில் இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை, விசே அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளை மாவட்ட விவசாய அமைப்புகள், மாத்தறை மற்றும் மொனராகலையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் இந்தத் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றனர்.